துரூவ் ஜுரெல் அடுத்த எம்.எஸ்.தோனியாக உருவெடுப்பார்: சுனில் கவாஸ்கர் கணிப்பு
- கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது
- இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் டெஸ்ட் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.
இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்து, இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார்.
துருவ் ஜுரலின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர் அவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.
இது குறித்து பேசிய கவாஸ்கர், "கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.