கிரிக்கெட் (Cricket)

இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

Published On 2023-10-08 06:53 GMT   |   Update On 2023-10-08 06:53 GMT
  • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
  • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:

10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News