சாய் சுதர்சன், ஸ்ரேயஸ் அரை சதம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
- டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஜோகனஸ்பெர்க்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர், சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். ஸ்ரேயஸ் 52 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்தியா 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.