கிரிக்கெட்

60 அல்லது 70 ஓவர்கள்தான்: அதீத நம்பிக்கையில் ஜேம்ஸ் ஆண்டர்சன்

Published On 2024-02-05 03:14 GMT   |   Update On 2024-02-05 03:14 GMT
  • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை.
  • தங்களுடைய அதிரடி ஆட்ட அணுகுமுறை மூலம் இலக்கை தொட முயற்சிப்போம்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 332 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. 180 ஓவர்கள் வீசப்படலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக களத்தில் நின்றாலே வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், 60 முதல் 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:-

சனிக்கிழமை இரவு எங்களுடைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் 600 டார்கெட் என்றாலும் கூட அதை நாம் துரத்த வேண்டும் என்றார். இது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெளிவான ஒன்றை உணர்த்தியுள்ளது. அது என்னவென்றால், நாளை (இன்று) நாங்கள் டார்கெட்டை தொட முயற்சிப்போம் என்பதுதான்.

இன்னும் 180 ஓவர்கள் மீதம் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் 60 அல்லது 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம். நாளைய எங்களது ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. அது வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி. எங்களுடைய வழியில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்" என்றார்.

Tags:    

Similar News