கிரிக்கெட் (Cricket)

பட்டையை கிளப்பிய பட்லர்.. சாதனைக்கு மேல் சாதனை படைத்து அசத்தல்

Published On 2024-04-17 07:56 GMT   |   Update On 2024-04-17 07:56 GMT
  • தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
  • ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.

கொல்கத்தா:

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.

ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.

இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

Tags:    

Similar News