null
இங்கிலாந்து மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள்- லாபுசேன்
- நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம்.
- அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபுசேன் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதில் மும்முரமாக இருந்தபோதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பார்மில் உள்ளார்.
இந்நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள் எனவும், கவுண்டி கிரிக்கெட் உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இயற்கையாகவே, ஆஸ்திரேலியாவுக்காக நம்பர் 3 பேட்டிங் செய்யும் எவருக்கும் பொறுப்பு இருக்கும். 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போதும் எனக்கு இந்த பொறுப்பு இருந்தது. ரன்கள் எடுப்பது எனது வேலை. நான் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என் வேலையைச் செய்ய வேறொருவரைக் தேர்வு செய்து விடும். இந்த நிலை எப்போதுமே மாறாது.
என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகமது சமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுண்டி கிரிக்கெட்டில் 28 வயதான அவர் எட்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் மொத்தம் 504 ரன்கள் எடுத்தார்.