கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் 'லீக்' போட்டி: ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூ பிளெசிஸ் கேப்டன்?

Published On 2022-08-16 08:19 GMT   |   Update On 2022-08-16 08:19 GMT
  • ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம்
  • 38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டியை போன்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் 'லீக்' போட்டியை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த போட்டி நடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்த 20 ஓவர் 'லீக்' தொடரில் விளையாட உள்ள 6 அணிகளை 6 ஐ.பி.எல். உரிமையாளர்கள் வாங்கி உள்ளனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கியுள்ளது. அந்த அணி ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜே.எஸ்.கே.) என்று அழைக்கப்படுகிறது.

6 அணியும் 17 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்து இருந்தது. எஞ்சிய 12 வீரர்களை செப்டம்பர் மாதம் 20-ந் தேதி நடைபெறும் ஏலத்தில் தேர்ந்து எடுக்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூ பிளெசிஸ் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அவரால் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

டூ பிளெசிஸ் ரூ.2.98 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனான அவர் 2011 முதல் 2015 வரையிலும், 2018 முதல் 2021 வரை ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

டூ பிளெசிஸ் தவிர மேலும் 4 வீரர்கள் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளனர். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொய்ன் அலி ரூ.3.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கையை சேர்ந்த தீக்சனா (ரூ.1.59 கோடி), வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமரியோ ஷெப்பர்டு (ரூ.1.39 கோடி), தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ஜெரால்டு கோட்சீ (ரூ.39 லட்சம்)ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இதுகுறித்து சி.எஸ்.கே. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

இதில் மொயின் அலி, தீக்சனா ஐ.பி.எல். போட்டி யில் சி.எஸ்.கே. அணிக்கு ஆடி வருகிறார்கள்.

மேலும் சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார்.

சிம்மன்ஸ், அல்பி மார்கல் ஆகியோரும் பயிற்சி யாளர் குழுவில் இடம் பெற்று இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News