சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் லஹிரு திரிமானே
- இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் லஹிரு திரிமானே.
- இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லஹிரு திரிமானே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியவர். 2010-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான இவர் 2022-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
இடது கை ஆட்டக்காரரான திரிமானே 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,088 ரன்களை எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும்.
127 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள திரிமானே 3,164 ரன்களை எடுத்துள்ளார். இதில் 21 அரை சதங்களும் 4 சதங்களும் அடங்கும்.
26 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 291 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அணிக்காக விளையாடியது மிகவும் பெருமையான தருணம். கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்திருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த மற்றும் ஆதரவாக இருந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன் லஹிரு திரிமானே ஓய்வு அறிவித்துள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.