25 ஆண்டு சாதனையை முறியடித்த டோப்லே
- இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லாட்ஸ் மைதானத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் 5 விக்கெட்டுகள் மேல் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டேரன் கோஃப் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை டோப்லே முறியடித்துள்ளார்.
இவர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களில் டோப்லே முதல் இடத்தை பிடித்தார்.
இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். அவரை டோப்லே பின்னுக்கு தள்ளியுள்ளார். இவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வரிசையில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் கிறிஸ் வோக்ஸ் உள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 45, 47 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.