ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் - இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது.
- குடகேஷ் மோடி 2 இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட் வீழ்த்தினார்.
புலவாயோ:
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டி ரத்தானது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னசென்ட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ்டன் சேஸ் 70 ரன்னும், ரேமான் ரீபர் 53 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வேயின் விக்டர் நியாச்சி 5 விக்கெட்டும், பிராண்டன் மவுடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே 173 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் கிரெய்க் எர்வின் 72 ரன்னும், இன்னசென்ட் 43 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குடகேஷ் மோட்டிக்கு அளிக்கப்பட்டது.