'கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய்' : மும்பை அணியின் இளம் வீரரை ஊக்கப்படுத்திய ப்ராவோ
- 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்
- ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.
ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.
பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அண்மையில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்.
அப்போட்டியில் அவரது பந்துவீச்சை இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசினார்கள். அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில் இளம் வீரர் க்வேனா மபாகாவுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ட்வயன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன். கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் என்று உறுதியாக சொல்வேன். இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே. இது உனக்கு மிகப்பெரிய சவால். இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல கைரன் பொல்லார்ட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில்,
"தலையை உயர்த்து இளைஞனே. இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கெரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது. ஆனால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" ஏன்னு பதிவிட்டுள்ளார்.