உலக கோப்பை தகுதிச்சுற்று - சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே வெற்றி
- உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
- இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின.
புலவாயோ:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று நடந்தது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 142 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லாங்வே 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து ஆடிய ஓமன் அணி போராடி தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரஜாபதி சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.