ஆன்மிக களஞ்சியம்

ஆரத்தி உருவான விதமும் அதன் மகத்துவமும்

Published On 2024-09-18 10:45 GMT   |   Update On 2024-09-18 10:46 GMT
  • ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை.
  • மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை.

சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர் பீமா என்பவர் மிகவும் முக்கியமானவர்.

1911&ம் ஆண்டு, அவர் முதன் முதலாக சீரடிக்கு வந்து பாபாவின் கமலப் பாதங்களில் சரண் அடைந்தார்.

பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்திப்பாடல்களை இயற்றினார்.

எல்லா ஆரத்திப்பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார்.

அதன் படியே இன்றும் ஆரத்திப்பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது.

சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன.

இதில் பாபாவை போற்றி பாடப்பட்டவை மொத்தம் 16. மீதி 14 பாடல்கள் மகாராஷ்டிர மாநிலத்தில், எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள்.

இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்கனின் அடியவர்களால் இயற்றப்பட்டவை.

உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் எழுதிய 2பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தன ஸ்வாமியின் ஒரு பாடல்.

மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷ சூக்தத்தில் இருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்டிர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.

பாபாவைப் போற்றிப்பாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜிநாலும் இயற்றப்பட்டவை.

இந்தப் பன்னிரெண்டு (9பிளஸ்3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவின் அடியவர்களான ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள்.

1905 ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார்.

பாபா இந்தப் பாடலை, உதி பாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார்.

பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்ற பாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல்.

மொத்தம் உள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்கிருதத்திலும் ,மற்றொன்று இந்தியும், சமஸ்கிருதமும் கலந்து உள்ளது.

இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குச் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது.

ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.

நாள் தவறாமல் ஆரத்தியில் கலந்துக் கொண்டு வழிபடும் பக்தர்களின் கர்மவினையால் நேரும் தீங்குகளை பாபாவே தடுத்து, பக்தர்களை காக்கிறார்.

Similar News