ஆன்மிக களஞ்சியம்

பாபாவின் உடையை பெற காத்திருந்த பக்தர்கள்

Published On 2024-09-11 10:52 GMT   |   Update On 2024-09-11 10:52 GMT
  • ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார்.
  • இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார்.

சிலரை பார்த்ததும் அவர்களை ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் பாபாவுக்கு உதிப்பதுண்டு.

அத்தகையவர்களுக்கு பாபா தன் கிழிந்த அங்கியை கழற்றி கொடுத்து விடுவார்.

ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார்.

இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார்.

பாபாவிடம் முக்தாராம் என்றொரு பக்தரும் சேவை செய்து வந்தார்.

ஒரு தடவை அவருக்கு தன் அழுக்கு உடை ஒன்றை கொடுத்து பாபா ஆசீர்வதித்தார்.

தர்மசாலாவுக்கு வந்த முக்தாராம், பாபாவின் அழுக்கு உடையை நன்றாக துவைத்து வெளியில் இருந்த கொடியில் காயப்போட்டார்.

பிறகு பாபாவை வணங்குவதற்காக துவாரகமாயிக்கு சென்று விட்டார்.

அந்த சமயத்தில் வாமன்ராவ் என்ற பாபா பக்தர் அங்கு வந்தார்.

அப்போது அவருக்கு அசரீரியாக ஒரு குரல் கேட்டது.

''பார்த்தாயா.... முக்தாராம் என்னை இங்கே கொண்டு வந்து, துவைத்து இப்படி தலைகீழாக தொங்க போட்டு விட்டு போய் விட்டான்'' என்ற குரல் கேட்டது.

பாபா பேசுவது போன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வாமன்ராவ், அங்கு பாபாவின் உடை துவைத்து காயப் போட்டிருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார்.

அந்த உடையை எடுத்த வாமன்ராவ், கண்களில் ஒற்றிக் கொண்டு, பிறகு தானே அதை அணிந்து கொண்டார். அப்படியே துவாரகமாயிக்கு சென்றார்.

தன் உடையை வாமன் ராவ், அணிந்து வந்ததைப் பார்த்ததும் பாபாவுக்கு கோபம் வந்தது ''நீ ஏன் இந்த உடையை அணிந்தாய்?'' என்று கடிந்து கொண்டார். என்றாலும் வாமன்ராவ், அந்த உடையை கழற்றவில்லை.

அந்த உடையை தொடர்ந்து அணிந்தால்தான் தனக்கு சன்னியாசம் கிடைக்கும் என்று வாமன் ராவ் உறுதியாக நம்பினார். அவர் நம்பியது போலவே விரைவில் அவர் சன்னியாசி ஆகி விட்டார்.

பாபாவுக்கு நீண்ட நாட்களாக சேவை செய்து வந்த பல பக்தர்கள், அவரிடம் பழைய உடையை தாருங்கள் என்று கெஞ்சி கேட்பதுண்டு. ஆனால் பாபா அவ்வளவு எளிதாக தன் கிழிந்த உடைகளை கொடுக்க மாட்டார். எரித்து விடுவார்.

Similar News