நள தமயந்தி வாழ்வில் திருநள்ளாற்றின் மகிமை
- திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும்.
- நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தேவர்களை மறுத்து நிடத நாட்டு மன்னன் நளனைக் கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி.
இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தார்கள்.
எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன்.
பின்னர் இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான்.
அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது.
சனிபகவானின் கருணையை எண்ணி நளராஜனே பலவிதமான பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான்.
இவன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம்.
நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.
திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும்.
நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.
குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோவிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும்.
தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.