முருக பக்தர்களின் மனம் கவர்ந்த சிறுவாபுரி
சென்னைக்கு வட மேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33&வது கிலோ மீட்டரில் இடது பக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவு வாயில்) நம்மை வரவேற்கிறது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
நுழைவுவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்த மாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது.
இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22&வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில்கள் பல இருப்பதை, அருணகிரிநாதர், 'ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி' எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.