ஆன்மிகம்

கார்த்திகை விரதமும் அது உருவான கதையும்

Published On 2016-06-18 08:28 GMT   |   Update On 2016-06-18 08:28 GMT
சிவனுக்கு திருக்கார்த்திகை போல, முருகனுக்கு ஆடிக்கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் வருகிறது. சிவனுக்கு திருக்கார்த்திகை போல, முருகனுக்கு ஆடிக்கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்வோர் பதவி உயர்வு அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதம் இருந்ததால், எல்லா முனிவர்களிலும் மேலான பதவி பெற்றார்.

இந்த விரத நாளில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் படிக்க வேண்டும். முருகனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவன் தன் ஆறு நெற்றிக் கண்களில் நெருப்புப்பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர்.

அவை ஆறு குழந்தைகளாக உருவாயின. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். பிள்ளைகளைக் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒரு முகமாக்கினாள்.

அப்பிள்ளைக்கு ‘கந்தன்’ என்ற திருநாமம் உண்டானது. சிவபெருமான் முருகனை வளர்த்துஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், ‘நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள்.

உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்றபெயரும் வழங்கும். கார்த்திகையன்று விரதமிருந்து வழிபடுவோர் சகலசவுபாக்கியம் பெறுவர்’ என அருளினார். காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்னும் காவியத்திலும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்திலும் இந்தத் தகவல்கள் உள்ளன.

Similar News