ஆன்மிகம்
சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனை தரிசிப்பதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை படத்தில் காணலாம்.

மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

Published On 2016-07-30 02:55 GMT   |   Update On 2016-07-30 02:55 GMT
ஆஷாட மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கன்னட ஆடி மாதமான ஆஷாட மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 5 மணி முதல் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதையடுத்து பக்தர்களுக்கு, அம்மன் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆஷாட மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, மைசூருவில் பல்வேறு பகுதிகளிலும் திருவிழாபோல் கொண்டாடப்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மைசூருவில் பெய்த கனமழையால் சாமுண்டி மலையில் அமைந்துள்ள பக்தர்களுக்கான மண்டபத்தின் ஒரு பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தின் மேல்பகுதியில் இருந்துதான் மைசூரு நகரை பார்த்து ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழையால் மைசூருவில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழை சேதங்கள் குறித்தும், சாமுண்டி மலையில் அமைந்துள்ள மண்டபத்தை சீரமைப்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

Similar News