ஆன்மிகம்

வள்ளியை கைபிடிக்க வந்த கந்தன்

Published On 2017-08-29 08:34 GMT   |   Update On 2017-08-29 08:34 GMT
முருகப்பெருமானை மணம் முடிக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்தாள் சுந்தரவல்லி. இவர்கள் திருமணம் நடந்த கதை தெரிந்து கொள்ளலாம்.
முருகப்பெருமானை மணம் முடிக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்தாள் சுந்தரவல்லி. அவளுக்கு கந்தப்பெருமான் அளித்த வரம் காரணமாக வள்ளி மலை என்ற பகுதியில் வேடர் குலத்தில் உதித்து வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். வேடர் குல வழக்கப்படி பெண்கள் மலைப்பகுதியில் உள்ள தினைப்புனத்தை குறிப்பிட்ட நாட்கள் காவல் காக்க வேண்டும்.

அதன்படி வள்ளியும் தினைப்புனத்தை காவல் காப்பதற்காக சென்றாள். அங்கு வள்ளியைத் தேடி வேடன் உருவில் வந்தார் முருகப்பெருமான். அழகிய திருமேனி கொண்ட அவர், கையில் வில்லும், அம்பும் ஏந்தி வள்ளியின் முன்பாக வந்து நின்றார். அவரை கண்டதும் வள்ளி, ‘தாங்கள் யார்? இங்கு ஏன் வந்தீர்கள்?’ என்று வினவினாள்.

வேடன் உருவில் வந்த முருகப்பெருமானோ, அந்த கேள்வியை சட்டை செய்யாமல், வள்ளியை நோக்கி காதல் மொழியில் பேசத் தொடங்கினார். ‘பெண்ணே! உன் மீது எனக்குள்ள காதலின் காரணமாக, உன்னை மணம் புரியும் எண்ணத்தில் உன்னைக் காண வந்தேன். என்னை விரட்டும் விதமாக ‘ஏன் வந்தாய்?’ என்று கேட்காமல், கனிவாக என்னை பார்க்கக் கூடாதா?’ என்றார்.

முருகப்பெருமான் வள்ளியிடம் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது, வள்ளியின் தந்தையான நம்பிராசன், வேடவர்கள் புடைசூழ அங்கு வந்து கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்ததும் வள்ளிக்கும் பயம் வந்துவிட்டது. ‘தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேடனைப் பார்த்தால் அவர்கள் இவரை எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்’ என்று எண்ணியவள், ‘உடனே இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள்’ என்றாள்.

முருகப்பெருமான் சிறிது தூரம் சென்று வேங்கை மரமாக மாறி நின்றார். அப்போது நம்பிராசனுடன் அங்கு வந்த வேடவர்கள், இந்த இடத்தில் புதியதாக மரம் ஒன்று நிற்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர்களில் சிலர், மரத்தை வெட்ட முயன்றனர். ஆனால் அவர்களை நம்பிராசன் தடுத்து விட்டார். ‘இந்த மரம் தினைப்புனத்தை காவல் காக்கும் வள்ளிக்கு நிழல் கொடுக்கும். எனவே அதனை வெட்ட வேண்டாம்’ என்று கூறிவிட்டார்.

பின் மகளைப் பார்த்து விட்டு நம்பிராசனும், வேடவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். அதுவரை வேங்கை மரமாக நின்றிருந்த முருகப்பெருமான் மீண்டும் வேடனாக மாறி வள்ளியிடம் வந்தார். காதல் மொழி பேசினார். வேடனாக வந்த முருகப்பெருமானிடம் வள்ளியின் மனம் சென்றாலும், முன்பின் தெரியாத ஆடவரிடம் பேச்சை வளர்ப்பது தவறு என்ற பெண்மைக்கே உரிய அச்சம், நாணம் அவளை தடுத்தது.

‘தனியாக இருக்கும் பெண்ணிடம் இதுபோன்று நடந்து கொள்வது சரியல்ல’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசினாள் வள்ளி.

மறுமுறை முதியவர் வேடத்தில் வந்தார் முருகப்பெருமான். மிகவும் பசியாக இருப்பதாக கூறிய அவர், சாப்பிட ஏதாவது தருமாறு வள்ளியிடம் கேட்டார். இரக்கம் கொண்ட வள்ளி, தினை மாவும், தேனும் கலந்து முதியவருக்கு கொடுத்தாள். அதனை உண்டு முடித்தவர், ‘தாகமாக உள்ளது தண்ணீர் பருக வேண்டும்’ என்றார். அவரை அங்கிருந்த சுனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று நீர் பருக வைத்தாள்.



‘உன்னால் என்னுடைய பசியும் தாகமும் தீர்ந்து விட்டது. ஆனால் இப்போது காதல் மோகம் தலைதூக்கி விட்டது. என்னை நீ மணம் புரிந்து கொண்டால் உன்னை நான் உலகம் போற்றி, துதிக்கும் வகையில் உயர்த்து வேன்’ என்றார் முதியவர்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபத்தில் கொந்தளித்தாள் வள்ளி. ‘இந்த தள்ளாத நிலையில், தவம் புரிய வேண்டிய வயதில், இது போன்று பேசுவது உங்களைப் போன்றவர்களுக்கு அழகல்ல!. தாங்கள் பேசியது எம் குலத்தவர்கள் யாருக்காவது தெரிந்தால், உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும். நான் மேலும் சினம் அடையும் முன்பாக இங்கிருந்து சென்று விடுங்கள்’ என்று கூறிவிட்டு தினைப்புனம் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றாள்.

எப்படியும் வள்ளியை திருமணம் செய்ய வேண்டும். அதற்காக தன் அண்ணனான ஆனைமுகனிடம் வேண்டி, அவரது உதவியை நாடினார் முருகப்பெருமான். தம்பியின் காதலுக்காக ஆனைமுகன், யானையாக மாறி வள்ளியை நோக்கி ஓடி வந்தார். யானையைப் பார்த்ததும் அஞ்சி நடுங்கிய வள்ளி, முதியவரை நோக்கி ஓடிப்போய், ‘யானையிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறி அவரது நெஞ்சில் கண்களை மூடி தஞ்சம் அடைந்தாள்.

அதைப் பார்த்ததும் யானை அங் கிருந்து அகன்று காட்டிற்குள் ஓடி மறைந்தது. வள்ளி கண் விழித்து பார்த்தபோது, முதிர்ந்த தோற்றத்தை நீக்கி ஆறுமுகப்பெருமானாக அழகனாக நின்றிருந்தார் முருகப்பெருமான். தங்கள் குலத்தவர்கள் தெய்வமாக வணங்கும் முருகப்பெருமானே தன் முன் நிற்பதைப் பார்த்து கைகூப்பினாள் வள்ளி. அவளது முற்பிறப்பை அவளுக்கு உணர்த்திய கந்தன், மறுதினம் வருவதாக கூறி அங்கிருந்து மறைந்தார்.

சொன்னது போல் மறுதினமும் வந்தார் முருகப்பெருமான். அவர் வள்ளியோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வள்ளியின் தந்தை நம்பிராசனும், வேடவர்களும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் சாதாரண மானிட வேடத்தில் இருந்த முருகப்பெருமானை பார்த்து ஆத்திரம் கொண்டனர். ‘அவனை பிடித்து, அடித்து கொல்லுங்கள்!’ என்று உத்தரவிட்டான் நம்பிராசன்.

வேடவர்கள் பாய்ந்து சென்று முருகப்பெருமானை தாக்க முயன்றனர். அம்புகளை எய்தனர். ஈட்டியை தூக்கி எறிந்தனர். இதனால் வள்ளி பதற்றம் அடைந்தாள். முருகப்பெருமான் கையசைவில் அனைத்து ஆயுதங்களும் அவரை தொடும் முன்பாக கீழே விழுந்தன. மீண்டும் கந்தக் கடவுள் கையசைத்ததும் அனைவரும் இறந்து வீழ்ந்தனர். தம் குல வேடவர்கள் அனைவரும் இறந்ததை கண்டு வள்ளி வருத்தம் அடைந்தாள்.

அப்போது அங்கு வந்த நாரதர், ‘சுவாமி! வள்ளியின் மனம் குளிர, இறந்த வேடவர்களை உயிருடன் எழுப்பித் தர வேண்டும்’ என்றார். அதன்படியே அனைவரையும் உயிருடன் எழச் செய்தார் முருகன். அப்போது ஆறுமுகப் பெருமானின் எழில்மிகு காட்சியை கண்டு நம்பிராசனும், வேடவர்களும் தொழுதனர். அவர்கள் முருகப்பெருமானையும், வள்ளியையும் தங்கள் இருப்பிடம் அழைத்துச் சென்று, முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

Similar News