ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-06-07 06:43 GMT   |   Update On 2018-06-07 06:43 GMT
பஞ்ச பூதங்களில் ஆகாய தலமாக விளங்குவதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பஞ்ச பூதங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். மனித உடம்பை அமைப்பாக கொண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இவற்றில் மார்கழி மற்றும் ஆனி மாதம் நடைபெறும் மகா அபிஷேகமும், தரிசனமும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில் மேற்கண்ட 2 தரிசனத்தின் போது மூலவராகிய நடராஜர், உற்சவராக புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். எனவே இந்த காட்சியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

அப்படி சிறப்பு வாய்ந்த நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, கோவிலில் 10-ந் தேதி இரவு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மறுநாள் 11-ந் தேதி ரக்‌ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பின்னர் 12-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. விழாவில் 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான வருகிற 20-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் மூலவராகிய ஆனந்தநடராஜரே எழுந்தருளி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அன்று இரவு ராஜசபை என்கிற ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமிக்கு லட்சார்ச்சனையும், 21-ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர் ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து 22-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News