ஆன்மிகம்
சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வந்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி - சேரமான் நாயனார் வீதிஉலா

Published On 2018-07-21 06:30 GMT   |   Update On 2018-07-21 06:30 GMT
நெல்லையப்பர் கோவிலில் திருவாடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்கள் வீதிஉலா நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனார் குருபூஜை, திருவாடி சுவாதி விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடந்தது. அவர்களுக்கு பின்னால் 63 நாயன்மார்கள் அணிவகுத்து சென்றனர். வீதிஉலா முடிந்ததும் நெல்லையப்பர் கோவிலை சென்றடைந்தனர்.

தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கைலாசம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு மட்டும் கைலாசம் செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும், சேரமான் நாயனாரை நந்தி பகவான் தடுத்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் நடந்தது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை கைலாசம் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

இரவில் சுவாமி சன்னதி பிரகாரத்தில் கைலாச மலையில் சுவாமி, அம்மாள் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அந்த இடத்துக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News