ஆன்மிகம்

அரிய வழிபாட்டு தகவல்கள்

Published On 2018-10-30 05:18 GMT   |   Update On 2018-10-30 05:18 GMT
இந்து சமயத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. சில அரிய வழிபாட்டு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வலது பாத நடராஜர்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள கேடிலியப்பர் ஆலயத்தில் நடராஜர், இடது காலை ஊன்று வலது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இறைவன் ஆடும் போது, பிரம்மா தாளம் போட, மகாவிஷ்ணு மத்தளம் வாசிக்க, லட்சுமி கைத்தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்கும் அரிய கோலம் இதுவாகும்.

ராசிகள் மேல் தட்சிணாமூர்த்தி

திருவாரூர் மாவட்டம் கழுகத்தூர் என்ற இடத்தில் ஜடாயுபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜசிம்மாசனத்தில் காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் 12 ராசிகளையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

துளசி ஏந்தும் பெருமாள்

கும்பகோணம் அருகே உள்ளது இலந்துறை என்ற ஊர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் பத்ரி நாராயணன் சன்னிதி அமைந்துள்ளது. பத்ரிநாத்தில் இருப்பது போலவே, இங்குள்ள நாராயணரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கரம் அபயம் காட்டியபடியும், இடதுகரம் பாதங்களைக் சுட்டிக் காட்டியபடியும் இருக்கிறது. மற்ற இரு கரங்களில் ஒரு கையில் துளசி மணி மாலையும், மற்றொரு கையில் துளசிச் செடியையும் ஏந்தியிருக்கிறார்.

தென்திசை துர்க்கை

பொதுவாக வடதிசை நோக்கியபடியே துர்க்கை அம்மன் காட்சி தருவார். ஆனால் வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் துர்க்கை அம்மனை தரிசிக்க முடியும். இவரை மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைப்பார்கள்.

முப்பழ விளக்கு

கும்பகோணம் அருகே இலந்துறை அபிராமி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களைக் கொண்டு நெய்விளக்கேற்றி ஆயுத வடிவில் மாவிளக்குகளை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். இங்கு முப்பழ விளக்கு வழிபாடு என்பது மிகவும் பிரசித்திப் பெற்றதாக விளங்குகிறது.
Tags:    

Similar News