ஆன்மிகம்
பழனி கோவிலில் மூலவர் சன்னதி அருகே உள்ள துவார பாலகர்களுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

Published On 2018-11-09 04:59 GMT   |   Update On 2018-11-09 04:59 GMT
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
அறுபடைவீடுகளுள் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலை காலசந்தி பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி ஆகியோர்களுக்கு காப்புகட்டு நடந்தது.

அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் உச்சிகால பூஜையில் மூலவருக்கு காப்புகட்டும், மலைக்கோவிலில் உச்சிகால பூஜையின் போது கல்ப பூஜையும் நடந்தது. அதன்பின்னர் விநாயகர், மூலவர், உற்சவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், கொடிமரம், மயில், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டிக்கொண்டனர். மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணிய குருக்கள், சந்திரமவுளி ஆகியோர் காப்பு கட்டிவிட்டனர்.

7 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் சின்னக்குமாரர், சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடைதிறப்பும், உடன் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை, படையல், நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், மதியம் 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் சின்னக்குமாரர், வில்-அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

அதன் பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படும். தொடர்ந்து சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானைமுக சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோப சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளலும், சின்னக்குமாரர் சந்திப்பும், தீபாராதனையும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மலைக்கோவில் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜை நடைபெறும். விழாவில் வருகிற 14-ந்தேதி காலை 9 மணிக்கு சண்முகர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும், அன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி வருகிற 13-ந்தேதி மலைக்கோவிலில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தசஷ்டி விழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சமய செற்பொழிவு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News