ஆன்மிகம்

சென்னையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

Published On 2018-11-09 06:19 GMT   |   Update On 2018-11-09 06:19 GMT
சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கலச பூஜையுடன் தொடங்கியது. 13-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
ஒவ்வொரு மாதம் வரும் சஷ்டிதிதியில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அதில் முக்கியமாக ஐப்பசி வளர்பிறை சஷ்டிதிதி கந்தசஷ்டியாகும். முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதற்காக ஐப்பசி மாதம் அமாவாசை அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து சஷ்டிதிதி வரை 6 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். இறுதிநாளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் பக்தர்கள் தங்கள் விரதங்களை முடித்துக்கொள்வார்கள்.

சென்னை, பாரிமுனை கந்தகோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசாமி கோவிலில் 91-ம் ஆண்டு கந்தசஷ்டி கோடி அர்ச்சனை விழா நேற்று தொடங்கி 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முடிய 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக விழா நாட்களில் மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய 4 சன்னதிகளில் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற உள்ளன.

13-ந்தேதி மகா சஷ்டி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் முத்துக்குமரன் சாமி பவனி வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் விழா பாய்கடை அருகில் நடைபெறுகிறது.

14-ந்தேதி (புதன்கிழமை) காலை 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு தெய்வயானை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சிறப்பு ஆராதனையைத் தொடர்ந்து மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

வடபழனி ஆண்டவர் கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கி, வரும் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு தெற்கு ராஜகோபுர சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

விழா நாட்களில் சிறப்பு அர்ச்சனை, அலங்கார பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இதேபோன்று, பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், தண்டையார்பேட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சிறுவாபூரி முருகன் கோவில், சிட்டிலபாக்கம் குமரன்குன்றம், திருப்போரூர் கந்தசாமி கோவில், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், குயப்பேட்டை முருகன்கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News