ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந்தேதி திறப்பு

Published On 2019-02-09 05:06 GMT   |   Update On 2019-02-09 05:06 GMT
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, வருகிற 12-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலை வகிக்கிறார். மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மேலும், தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் சாமி தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில் சபரிமலையில் தற்போதும் பதற்றமான சூழ்நிலை உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த சீசனில் அமலில் இருந்தது போல், நடப்பு மாத பூஜை நாட்களிலும், 144 தடை உத்தரவை அமல்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் நூகு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News