பத்மாவதி தாயாருக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க ஆபரணங்கள்
- பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது.
- திருமஞ்சனத்தின்போது உற்சவருக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் தனது தெய்வீக மனைவியான பத்மாவதிக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் 5 கிலோ எடையிலான தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரத்தை வழங்கினார்.
அந்த ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரம் திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு திருச்சானூர் கோவிலை அடைந்ததும், பஞ்சமி மண்டபத்தில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபடும் முன் அர்ச்சகர்கள் தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். திருமஞ்சனத்தின்போது உற்சவருக்கு அந்த தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி , சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.