ஆடி அமாவாசை: பம்பை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறப்பு ஏற்பாடு
- இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17-ந் தேதி வருகிறது.
இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிதும், பெரிதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் நடத்தும் சபரிமலை பம்பை ஆறு, திருவல்லம் பரசுராமர் கோவில், சங்குமுகம் கடற்கரை, வர்க்கலை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புடன் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசையான 17-ந் தேதி அதிகமான பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிகாலை 2.30 மணி முதல் பலி தர்ப்பணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட ஜோதிட பஞ்சாங்கத்தை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் பி.எஸ். பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.