ஆடிப்பெருக்கு: இன்று பவானி கூடுதுறை-கொடுமுடியில் புனித நீராட தடை
- பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது.
- திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.
பவானி :
பவானி கூடுதுறையில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இதற்காக பரிகாரம் செய்ய தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும் வேத விற்பன்னர்கள் பலரும் அங்கு உள்ளார்கள்.
இதேபோல் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராட கூடுதுறையில் குவிவார்கள். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்கள் முளைப்பாரி விட்டு விரைவில் குழந்தை வரம் வேண்டும் என்று புனித நீராடி புது மஞ்சள் கயிறும் கட்டிக்கொள்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று புனிதநீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை அன்றும், ஆடி முதல்நாள் அன்றும் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமானோர் அப்போது புனித நீராடினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எண்ணினார்கள்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கான இன்று (புதன்கிழமை) பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'பவானி காவிரி ஆற்றங்கரையோரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு,' வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தேவையான தயார் நிலையில் உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.
இதையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமான இந்த கோவில் சிறந்த பரிகார தலம் ஆகும். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளதால், உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.