வழிபாடு

சுவாமி தேருக்கு வடம் மற்றும் பொம்மைகளை கட்டி அலங்காரம் செய்யும் பணி நடந்தபோது எடுத்த படம்.

ஆனித்திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2023-07-01 04:30 GMT   |   Update On 2023-07-01 04:30 GMT
  • சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது.
  • வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணம் பாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

7-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து பல்லக்கு சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இரவில் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியருக்கு சோடஷ உபசார தீபாராதனை நடந்தது.

பின்னா் பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்களவாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனா். தொடர்ந்து சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது. கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பாம்பே சாரதாவின் பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (சனிக்கிழமை) நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி கோலத்திலும், பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

இரவு 10 மணிக்கு தேர் கடாட்ச வீதி உலாவும், சுவாமி தங்ககைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, படப்பு தீபாராதனையும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 8 மணிக்கு வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இதையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கோவில் பகுதியில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News