வழிபாடு

மண்டல பூஜை முடிந்து ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது

Published On 2023-12-28 05:49 GMT   |   Update On 2023-12-28 05:49 GMT
  • பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
  • வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.

இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.

Tags:    

Similar News