வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

Published On 2024-07-15 05:22 GMT   |   Update On 2024-07-15 05:22 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News