வழிபாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் கிரிவலம்

Published On 2023-11-28 04:21 GMT   |   Update On 2023-11-28 04:22 GMT
  • அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
  • அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தரும். 2-வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

இந்தநிலையில் தீபத்திருவிழா நிறைவ டைந்ததும், உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.

இன்று காலை கோவிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது.

அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். இன்று 3-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News