வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் ஆரம்பம்

Published On 2023-12-18 04:06 GMT   |   Update On 2023-12-18 04:06 GMT
  • 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
  • பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது

சிதம்பரம்:

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. வருகிற 27-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

28-ந் தேதி (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவ சங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

Tags:    

Similar News