சாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
- 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
- இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.
ஈரோடு:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.
கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.