ஆயிரம் கண்ணுடையாள் சமயபுரம் மாரியம்மன்
- வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள்.
- நேர்த்திக் கடன் தீர்க்க வருகிறார்கள்.
மஞ்சள் உடையும் மனசெல்லாம் பக்தியுமாக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திருச்சியின் எல்லா திசைகளில் இருந்தும் வெறுங்காலில் நடந்தே வருகிறார்கள். வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள். நேர்த்திக் கடன் தீர்க்க வருகிறார்கள். லட்சம் பிள்ளைகளை அரவணைக்க ஒரு தாய் இருக்கிறாள் என்கிற நம்பிக்கையில் வருகிறார்கள். வட்டாரத் தமிழால் காற்றையும் சொக்கவைத்து,
"சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
கண்ணபுரத்தாளே காரண சவுந்தரியே
ஆயிரம் கண்ணுடைய அலங்காரி வாருமம்மா"
என்று பாடிவரும் தன் பிள்ளைகளுக்காக தாயான மாரியம்மன் காத்திருக்கும் இடம்தான் 'சமயபுரம்.'
கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவள வனால் வெட்டப்பட்ட " பெருவள வாய்க்காலின்" வடகரையில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். இது கொள்ளிடம் நதிக்கு வடக்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார்கோவில் ரெயிலடியில் இருந்து 5 கி.மீ பயணித்தால் கோவிலை அடையலாம். மாகாளிகுடி, நரசிம்ம மங்கலம் கள்ளிக்குடி, கண்ணனூர் ஆகியவை சமயபுரத்தைச் சேர்ந்த சிற்றூர்கள்.
கருவறையில் உள்ள 'மாரியம்மன்' முற்றிலும் சுதை யாலான உருவமாகும். அதனால் அதற்கு அபிஷேகம் கிடையாது. அபிஷேகத்தால் ஏற்படும் சிதைவுகளைத் தவிர்ப்ப தற்காகவே, உலோகத்தால் ஆன உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சில கோவில்களைப்போல், 'கோப முகமாக' இல்லாமல் அன்பும் அருளும் துலங்கும் முகத்தோடு சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.