சபரிமலைக்கு சாம்பிராணி, கற்பூரம் எடுத்து வர தடை: தேவஸ்தானம் நடவடிக்கை
- வருகிற 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
- புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது.
திருவனந்தபுரம்:
சபரிலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இதற்கிடையே நடப்பு சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு பாதுகாப்பில் அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, சபரிமலையில் தேவையற்ற பொருட்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரின் ஆலோசனையின் பேரில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.
மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை போட்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.