சூரசம்ஹாரம் என்பது அழிப்பது அல்ல....ஆட்கொள்வது!
- சூரசம்ஹாரம் முடிந்த பிறகு ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
- சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்.
சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான்.
இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?
மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார்.
ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர்.
தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.
அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.
சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.
இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.
கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.
இதைத்தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.
இதைத்தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள்.
அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான். இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றிக் கொண்டே இருப்பான். அவனை ஜெயந்திநாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.
இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார். நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும்.
மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூரசம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.
சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.