சபரிமலையில் ஆன்லைனில் பஸ் டிக்கெட்டும் வாங்கும் வசதி அறிமுகம்
- ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.
- 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடை முறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பைக்கு வந்து செல்ல ஆன்லைன் மூலமாகவே பஸ் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.
கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தலைமையில் நடந்த முன்னேற்காடு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மந்திரி கணேஷ்குமார் கூறி யிருப்பதாவது:-
சபரிமலைக்கு யாத்திரை வரும் 40 பேர் கொண்ட குழுக்கள் 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே 220 பஸ்கள் அரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.