வழிபாடு

ஜாம்புவானோடை தர்காவில் பெரிய கந்தூரி விழா கோலாகலம்

Published On 2023-11-24 05:22 GMT   |   Update On 2023-11-24 05:22 GMT
  • ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
  • ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்வதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு 10.30 டிரஸ்டிகள் இல்லத்தில் இருந்து சந்தனங்கள் நிரப்பிய குடங்கள் தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் தொடங்கி நடைபெற்றது. பின்னர், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று, 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர்

எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தனக்குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது.

சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று, பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு வந்தடைந்து, மீண்டும் தர்காவை 3 முறை சுற்றியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது தூவி பிராத்தனை செய்தனர்.

பின்னர் அதி காலை 5 மணிக்கு சந்தன கூட்டில் இருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு, ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவிட்டார்.

பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர்ராஜேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

தொடர்ந்து, இன்று மாலை உள்ளூர் மக்களுக்காக அந்திக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா முடிவடைகிறது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் நடந்த இந்த கந்தூரி விழாவால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

Tags:    

Similar News