`அரோகரா' கோஷம் முழங்க சுவாமிமலையில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
- அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலம்.
- தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், தந்தை சிவனுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதுமாகும். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலமும் இதுவே.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா... பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரானது அசைந்தாடியபடி 4 ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்று, காவிரியில் தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது.