வழிபாடு

சித்ரா பவுர்ணமி இன்று நள்ளிரவு தொடங்குகிறது: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்

Published On 2023-05-04 09:22 GMT   |   Update On 2023-05-04 09:22 GMT
  • பவுர்ணமி இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.
  • பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News