வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு

Published On 2024-04-24 03:41 GMT   |   Update On 2024-04-24 03:41 GMT
  • அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
  • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.

தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

 தீர்த்தவாரி

பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News