கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
- நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
- கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில் கல்லறை தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்குட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் கல்லறை தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
ஆனால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் மக்கள் அவர்களாக வந்து, இறந்துபோன தங்களுடைய மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி நேற்று கிறிஸ்தவ மக்கள் பலரும் கல்லறை தோட்டங்களுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, அவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை தினத்தையொட்டி ஒரு சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து இறந்துபோன உறவினர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.
அடுத்த ஆண்டு முதல் வழக்கமான முறையில் கல்லறை தோட்டங்களில் திருப்பலி, பிரார்த்தனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.