பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
- பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த மாதம் 27-ந் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான், மேஷ ராசியில் இருந்து சுக்ரன் ராசியான ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.11 மணிக்கு மாறினார்.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளி அங்கியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் முன்பு உள்ள பகுதியில் உற்சவர் கார்த்திகை பெண்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
பின்னர் நேற்று மாலை குருபகவான் ரிஷப ராசிக்கு மாறும்போது, மூலவர் மற்றும் உற்சவருக்கும் கோவில் மேல் பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.