திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழாவையொட்டி குவிந்த பக்தர்கள்
- மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.