வழிபாடு

சிறப்பு கட்டண தரிசனத்திற்காக டிக்கெட் வசூலிக்கப்படுவதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் உத்தரவை மீறி சிறப்பு தரிசனத்திற்காக கட்டணம் வசூல்

Published On 2023-07-03 03:15 GMT   |   Update On 2023-07-03 03:15 GMT
  • பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது.
  • கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அதனால் பக்தர்கள் சிரமமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இருப்பினும் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் மற்றும் ராஜ கோபுரம் பகுதியில் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணத்தொகை தலா ஒருவருக்கு வழக்கம் போல் ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அலுவலர்கள் தங்களுக்கு பவுர்ணமியின் போது தான் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது. அதுவரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.

அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டு ஒரு நாளே ஆகும் நிலையில் கோவில் அலுவலர்கள் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாதது அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதியம் 12 மணி முதல் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணம் வசூலிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்திலும் வைக்கப்பட்டு இருந்த கட்டண தரிசன வழிக்கான பேனர்கள், வரிசையில் தொங்கவிடப்பட்டு இருந்த பலகையும் அகற்றப்பட்டது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அமைச்சர் உத்தரவிட்டும் கோவிலில் கட்டண தரிசனத்திற்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆனால் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்த நாங்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றனர்.

Tags:    

Similar News