வழிபாடு

பச்சைமலை முருகன் கோவில் அமைந்த வரலாறு

Published On 2024-05-23 04:48 GMT   |   Update On 2024-05-23 04:48 GMT
  • பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர்.
  • வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன்.

வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்ததால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன.

பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும்.

தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார்.

அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம்குமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது.

முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதன்படி அங்கு சென்று குழந்தை வடிவில் முருகப்பெருமான் இருக்கக்கண்டு பேரானந்தம் அடைந்து மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் நிறுத்தி தவம் மேற்கொண்டார்.

நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். நான் அமைத்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார்.

அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது.

21.07.1954 அன்று கோபி, புதுப்பாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் குப்புசாமி கவுண்டர் குமரனை வழிபட அங்கு வந்தார். முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் அவர்.

அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே? இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீகமாக உணர்ந்து ஒரு கால பூஜையுடன் இறைப்பணி மீண்டும் தொடங்கியது.

இன்று ஏழு கால பூஜையுடன், மிக பிரமாண்டமான கோவிலில் குகப்பெருமானுக்கு உகந்த திருவிழாக்களுடன், மற்ற தெய்வங்களுக்கான அனைத்து சிறப்பு தினங்களும் வெகு சிறப்பாக பச்சைமலை ஸ்ரீ பாலமுருகனின் திருவருளோடு நடைபெற்று வருகிறது.

பச்சைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பாதவிநாயகர் ஆலயத்தில்ஆதி காலம் முதல் அனைத்து விழாக்கள் மற்றும் உற்சவங்களின் முதல் பூஜை பாதவிநாயகருக்கு தான். அரசுவேம்பு மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாதவிநாயகருக்கு பிரம்ம அதிகாலை முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி ஒரு குடம் நீர் ஊற்றி 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும், அனைத்து வினைகளும் தீரும்.

முதல் திருப்பணி ஆரம்பித்த வருடத்தில் குப்புசாமி கவுண்டர் சிறப்பாக செயல்பட நிதியுதவி மற்றும் இதர வசதிகள் சரிவர கிடைக்கவில்லை. அன்றைய காஞ்சி மகா பெரியவரிடம் ஆசி பெற காஞ்சிபுரம் சென்றார்.

தன் நிலைமையை கண்டு வியந்த மகா பெரியவர் தன்னிடம் வருபவர்கள் சொந்த பிரச்சினைகளுக்காக ஆசி வேண்டி வருவர், ஆனால் நீங்கள் முருகன் ஆலயம் அமைக்க எண்ணி ஆசி வேண்டி வந்துள்ளீர்கள். அந்த குமரன் அருளால் நிச்சயம் அருமையான கோவில் அமையும் என ஆசி வழங்கினார்.

ஆனை முகத்தோனுக்கு ஒரு யாகம் நடத்தி மிகப்பெரிய யாகம் ஒன்றை குப்புசாமி கவுண்டர் நடத்தினார். அன்று ஆரம்பித்த திருப்பணி இன்று வரை பல மடங்கு வளர்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அன்று முதல் அனைத்து முக்கிய விசேஷங்களும் முழு முதற் கடவுளின் யாகத்துடன் தொடங்குகிறது. அச்சமயம் பக்தர்கள் விடாது தண்ணீர் ஊற்றி வழிபடுவர். இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மலை ஏறும் முன் ஸ்ரீ பாத விநாயகரையும் வணங்கி மலை ஏறத்தொடங்குவர்.

ஒருமுறை இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர் மீண்டும் மீண்டும் இந்த அழகு முருகனால் இங்கு வர தூண்டப்படுகின்றனர். 

Tags:    

Similar News