திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் காமாட்சி ஹோமம்
- இன்று முதல் 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
- கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் நடந்து வந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து கார்த்திகை ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி யாகசாலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சண்டி ஹோம சமாப்தி, மகாபூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், மூலவர் காமாட்சி தாயாருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கபிலேஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், பூஜை, ஜெபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் எனப்படும் ருத்ர யாகம் நடக்கிறது.