வழிபாடு

சஷ்டி தினத்தில் விரதம் அனுஷ்டிக்கும் முறை...!

Published On 2024-03-01 02:30 GMT   |   Update On 2024-03-01 02:30 GMT
  • சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு.
  • பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற "சஷ்டி விரதம்" அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும், பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.

காலையில் இருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ" வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள். ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

இந்த சஷ்டி விரத நாட்களில் புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

சஷ்டி தினத்தன்று குழந்தை இல்லாத பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோகியம் மேம்படும்.

மேலும் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் வாய்க்கும்.

சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக் கூர்மையும், ஆற்றலும், செயல்திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

சஷ்டி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப்பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News