வழிபாடு

திருச்செந்தூர் சென்றால் இந்த ஐவர்களை பார்க்க மறக்காதீங்க....

Published On 2024-06-20 02:24 GMT   |   Update On 2024-06-20 02:24 GMT
  • திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள்.
  • திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே மூவர் சமாதி உள்ளது.

திருச்செந்தூர் ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது.பெரும்பாலான ஆலயங்கள், கடற்கரையில் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின் பலம் கருதியும் இதுபோல் செய்வார்கள்.

ஆனால் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், கடற்கரையில் இருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 133 அடி உயரமுள்ள திருக்கோயிலின் ராஜகோபுரம் இருப்பதும் கடற்கரையில் இருந்து வெறும் 140 மீட்டரில் தான். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வியப்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் கருவறை இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் அமைய பெற்றுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன்படி இந்த ஆலயம் கட்டப்பட்டு சுமார் 3000 ஆண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் யார் என தெரியவில்லை என்றாலும் கூட இந்த ஆலயத்தை திருப்பணி செய்து பலமிக்கதாக மாற்றியவர்கள் ஐந்து அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே மூவர் சமாதி உள்ளது. மற்ற இருவருக்கும் வேறு பகுதிகளில் சமாதி இடம் பெற்றுள்ளது.

முதல் மூவர்களான மௌனசுவாமி, காசிசுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் திருச்செந்தூர் கோவில் அருகிலேயே உள்ளது.

கோயில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஊற்று என்றழைக்கப்படும் நாழிக்கிணறு முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்த நாழிக்கிணற்றின் தென் பகுதியில் தான் மௌனசுவாமி, ஆறுமுகசுவாமி,காசிசுவாமி ஆகியோரின் சமாதி அமைந்திருக்கிறது. இந்த சமாதியில் தினமும் பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

நான்காவதாக வள்ளிநாயக சுவாமியின் ஜீவ சமாதி திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தில் வடக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து சரவணப் பொய்கை செல்லும் பாதையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.

ஐந்தாவது தேசியமூர்த்திசுவாமியின் ஜீவசமாதியை தரிசிக்க வேண்டும் என்றால் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்தோ அல்லது வேறு மார்க்கமாகவோ ஆழ்வார்தோப்பு என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்திஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது தேசிய மூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி.

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க செல்பவர்கள் மூவர் சமாதியை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற இருவரது ஜீவசமாதியை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் திருச்செந்தூர் செல்வோர் முருகப்பெருமானின் ஆலய திருப்பணிகளை மேற்கொண்ட ஐவரின் ஜீவசமாதியை தரிசிக்கும் நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News